InformationNeeds.com
Home/கட்டுரைகள்/விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளிக்கும் குண்டுக்கரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில்  | Gundukarai Sri Swaminatha Swamy Temple seen in Vishwarupa Darshan
Spirituality

விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளிக்கும் குண்டுக்கரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில்  | Gundukarai Sri Swaminatha Swamy Temple seen in Vishwarupa Darshan

June 22, 2024uma144 views

விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளிக்கும் குண்டுக்கரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில் 

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் குழந்தை, ஆண்டிக்கோலம், தவக்கோலம், மயில் மீது நின்ற கோலம் எனப் பல வடிவங்களில் காட்சியளிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும் பல அரிய வடிவங்களில் தரிசித்திருக்கிறோம். அப்படியான அபூர்வ கோலங்களில் ஒன்றான, 11 முகங்களுடனும் 22 கரங்களுடனும் இத்திருத்தலத்தில் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். 

முருகப்பெருமான் பெரும்பாலான இடங்களில் ஒரே முகத்துடன் காட்சியளிக்கிறார். சில இடங்களில் அரிதாக இரண்டு முகம், மூன்று முகம், நான்கு முகம் என்று காட்சியளிக்கிறார். கழுகுமலை, கோடிக்கரை, அழகர்கோயில் ஆகிய இடங்களில் ஒரு முகத்துடனும் ஆறு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார். சில இடங்களில் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடனும் பன்னிரண்டு கரங்களுடனும் காட்சியளிப்பதைக் கண்டிருப்போம். 

ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் குண்டுகரையில் அருள்பாலிக்கும் சுவாமிநாத சுவாமி கோவிலில் 11 முகங்கள் மற்றும் 22 கைகளுடன் முருகப்பெருமான் அதிசய கோலமாகக் காட்சியளிக்கிறார். இப்படி ஒரு கோவிலை வேறு எங்கும் காண முடியாது. இது முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் என்று கூறப்படுகிறது. 

சூரபத்மனை கொல்வதற்கு முன் முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்ததாக தல புராணம் கூறுகிறது. முருகன் இங்கு வந்தபோது 11 முகங்களும், 22 கரங்களும் இருந்ததாகவும், அதே விஸ்வரூப கோலத்தில் முருகன் இங்கு காட்சி தருவதாகவும் ஐதீகம். மற்ற இடங்களில் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் ஓதும் போது சிவபெருமானின் மடியில் குழந்தையாக அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். 

ஆனால் இத்தலத்தில் மட்டும், முருகப் பெருமான், குன்று மீது அமர்ந்து பிரணவ மந்திரத்தின் பொருளைக் கூறுவதும், சிவபெருமான் நின்ற கோலத்தில் இருந்து அதைக் கேட்பதும் போலவும் காட்சியளிக்கிறது. இது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். 

தல வரலாறு 

300 ஆண்டுகளுக்கு முன்,  ராமநாதபுரத்தில் வாழ்ந்து வந்த பாஸ்கர சேதுபதி என்பவர், குண்டுகரை முருகன் கோயிலுக்கு தினமும் சென்று வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை சுவாமி மலை சென்று தரிசித்துவிட்டுத் திரும்பியபோது, ​ முருகன் அவரது கனவில் தோன்றி, குண்டுகரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு, புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அவருக்கும் ஊருக்கும் நன்மை பயக்கும் என்று கூறினார். 

முருகன் கனவில் கூறியபடி, பாஸ்கர சேதுபதி குண்டுக்கரைக்குச் சென்று, அந்தக் கோயிலில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு, 11 முகங்களும், 22 கரங்களும் கொண்ட புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலை, முருகனின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டியுள்ளார். 

கோவில் அமைப்பு 

ஸ்ரீ ஜெயதுர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமி, விநாயகர், பாலமுருகர், நவக்கிரகங்கள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் முன்புறம், ராஜகோபுரம் கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் நந்தியும் வேல், மயில், பாம்புடன் கூடிய கொடிமரம் ஆகியவை பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. 

கோயிலின் உள்ளே 18 திருக்கரங்களுடன் 7 அடி உயர துர்க்கை அம்மன் சிலை உள்ளது மற்றும் சித்திரை மாதம் முதல் நாள் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

விழாக்கள் 

தை பொங்கல் அன்று அம்பிகை சாகப்பரி என்னும் காய்கறி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். வைகாசி விசாகத்தன்று பிரமோத்ஸவம் நடைபெறுகிறது மற்றும் கந்தர் சஷ்டியின் ஏழு நாள் சூரசம்ஹார, திருகல்யாண உற்சவம் இங்கு கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகியவை இக்கோயிலின் மற்ற முக்கிய திருவிழாக்கள். 

நாமும் இத்திருத்தலம் சென்று சுவாமி நாதரைத் தரிசனம் ‌செய்வோம் வாழ்வில் வளம் பெறுவோம். 

விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளிக்கும் குண்டுக்கரை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயில்  | Gundukarai Sri Swaminatha Swamy Temple seen in Vishwarupa Darshan | InformationNeeds